0
நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

படம் வெளிவர  உள்ள நிலையில் ஐதராபாத்தில்  ‘லிங்கா’ தெலுங்குப் படத்திற்கான இசை வெளியீட்டின் வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே. விஸ்வநாத், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் நான்கு வருடங்களுக்கு மேல் படங்களில் நடிக்கவில்லை. இடையில் கோச்சடையான் வெளியானது. ஆனால் அது அனிமேஷன் படம். அதனால் நேரடி படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் தான் லிங்கா படத்தின் கதை பற்றி சொன்னார் கே.எஸ். ரவிக்குமார். 6 மாதத்தில் முடிப்பதாக இருந்தால் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன். கே.எஸ். ரவிக்குமார் அந்த சவாலை ஏற்று படத்தை ஆறு மாதத்திலேயே முடித்து விட்டார்.

அதுவும் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இருந்தும் படத்தை திட்டமிட்டபடி முடித்தது பெரிய சாதனை. எனக்கும் இது சவாலான படம். திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன். பாகுபலி படம் மூலம் ராஜமௌலி இந்தியாவிலேயே நம்பர் ஒன் இயக்குனராக வலம் வருவார். ஏனெனில் அவருடைய படத்தைப் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டதினால் சொல்கிறேன். எனக்கும் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Post a Comment

 
Top