0
தமிழ் சினிமா மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது. அதை பெரிய படங்கள் தான் நிகழ்த்துகிறது என்றால் அது நம்முடைய முட்டாள் தனம் தான். பல சின்ன பட்ஜெட் படங்கள் ஒன்று சேர்ந்து தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை மேலே கொண்டு செல்கிறது.

அந்த வகையில் பிரபு யுவராஜ் இயக்கத்தில், ராஜ் ஆர்யன் இசையில் வெளிவரவிருக்கும் படம் தான் ர. இப்படத்தின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி. இப்படத்தின் ட்ரைலரே நம்மை ஒரு நிமிடம் அச்சத்தில் உறைய வைக்கிறது.

ட்ரைலரின் ஆரம்பத்தில் ’இந்த கலியுகத்தில் உன்னதத்தை தீர்மானிப்பது பணம் மட்டுமே, இந்த உலகத்தில் எது தர்மம் என்பதை தீர்மானிப்பது வலுவானதே’ போன்ற மிரட்டும் வசனங்களுடன் ஆரம்பிக்கிறது. இதை தொடர்ந்து நாம் அனைவரும் கேங்ஸ்டர் படமாக இருக்குமோ என்று நினைத்து பார்த்தால், அங்கிருந்து மெல்லிய காதல் ஆரம்பிக்கிறது.

காதல் படமாக இருக்குமோ என்று நினைத்தால் உடனே அமானுஷ்ய உலகில் பயணிக்கிறது இந்த ர. கதாநாயகனுக்கு தெரியும் கருப்பு உருவம், அதை தொடர்ந்து அவனையே அது தாக்கி, அந்த அமானுஷ்யத்திற்கு அவர் பலிகடா ஆவது போல் மிரட்டியுள்ளனர். ஆனால், இதில் நாம் குறிப்பிட்ட எந்த கதையையும் திரையில் பார்த்தால் தான் பதில் கிடைக்கும்.

படத்திற்கு மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு மற்றும் இசை தான். படம் முழுக்க இரவு காட்சிகள் பெரும்பாலும் வருவதால் கிடைத்த லைட்டிங் எஃபெக்டில் ஒளிப்பதிவாளர் அசத்தியுள்ளார் போல. அதே போல் ட்ரைலரில் வரும் பின்னணி இசை நம்மை ஒரு நிமிடம் கூட கண் சிமிட்ட விடுவதாக இல்லை.

டிசம்பர் 5 வெளிவரவிருக்கும் இந்த ”ர” உங்களின் அச்சத்தின் உச்சத்தை உணர வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Post a Comment

 
Top