0
 ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தை யாராலும் மறக்க முடியாது. அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ”என்னுடைய கலையுலக வாரிசு பாக்யராஜ்” என்று பொதுமேடையில் பெருமையாக அறிவிக்க வைத்த மாபெரும் வெற்றிப் படம் அது.

அந்தக் காலத்தில் இப்படம் ஒரு ‘டிரென்ட் செட்டர்’ என்றே சொல்லப்பட்டது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மெகா ஹிட்டானது. பின்னணி இசை, படத்தை முன்னணிக்குக் கொண்டு வந்தது. அப்படத்தின் சாதனையை, பாக்யராஜின் வேறெந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

‘முந்தானை முடிச்சு’ உருவானபோது, யாரை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் மூழ்கிய பாக்யராஜ், கலாரஞ்சனி என்ற இளம் பெண்ணை வரவழைத்து ‘டெஸ்ட் ஷ¨ட்’ நடத்தினார். அப்போது அவருடன் வந்த பள்ளி மாணவி, துறுதுறுவென்று இருந்தார். பாக்யராஜ் கேட்ட கேள்விகளுக்கு கலாரஞ்சனி பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டு பதிலளித்தார். ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த பாக்யராஜ், ”யார் இது முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணன்னு பேசிகிட்டு…” என்று கத்தினார்

பிறகு வீட்டுக்கு வந்த மாணவி, ”சரியான சிடுமூஞ்சி டைரக்டரா இருக்காரு. இவரோட டைரக்ஷன்ல எல்லாம் அக்காவை நடிக்க வைக்க வேணாம்” என்றார். மனதில் உள்ளதை பட்டென்று போட்டுடைத்த தங்கையின் பேச்சைக் கேட்டு மிரண்ட கலாரஞ்சனி, ”ஏய்… அவரு பெரிய டைரக்டரு. இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று கண்டித்தார். ஆனால், ‘முந்தானை முடிச்சு’ படப்பிடிப்பு தொடங்கும் வேளையில், திடீரென்று கலாரஞ்சனியை நிராகரித்து விட்டார் பாக்யராஜ்.

வேறொரு ஹீரோயினுக்கு வலைவீசி தேடிக் கொண்டிருந்தபோது, டெஸ்ட் ஷூட் நேரத்தில் முந்திரிக்கொட்டை மாதிரி தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்த மாணவி ஞாபகத்துக்கு வரவே, ”அந்த பொண்ணை கூட்டிகிட்டு வாங்கய்யா” என்று பாக்யராஜ் ஆர்டர் போடவே, உதவி இயக்குனர்கள் ஆளுக்கொரு பக்கம் பறந்து, அந்த மாணவியை அழைத்து வந்தார்கள்.

தன்னைத் திட்டிய இயக்குனருக்கு எதிரில் வந்து நின்ற மாணவி, ”இப்ப எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டார். அதைப் பெரிதும் ரசித்த பாக்யராஜ், ”நீதான் என் படத்துக்கு கதாநாயகி. ரெடியா இரு” என்றார். இப்படித்தான் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார்.

Post a Comment

 
Top