0

தன் படங்களைப் பற்றி விமர்சித்த ட்வீட் ஒன்றுக்கு விரிவான பதிலளித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அத்துடன், லிங்கா படத்தின் சிறப்புகள் பற்றியும், 60 வயதில் டூயட் பாடி நடிப்பது, ராஜமவுலி படத்தில் நடிக்க விரும்புவது உள்ளிட்டவை பற்றி அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' படத்தின் தெலுங்கு இசையின் வெற்றி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் பங்கேற்றார்கள். இவ்விழாவில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது:
"புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சில நாளுக்கு முன்பு நடந்த நிவாரண நிதியுதவி நிகழ்ச்சிக்கு என்னால் வர முடியவில்லை. அப்போது என்னுடைய குடும்பத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியால் வர இயலாமல் போய்விட்டது. அதுக்காக நீங்க எல்லாரும் என்னை மன்னிக்க வேண்டும். சென்னைக்குப் போன பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னுடைய நிதியுதவியை வழங்குகிறேன்.

சுமார் நான்கு வருடங்கள் கழித்து நான் நடித்திருக்கும் 'லிங்கா' படம் வெளிவர இருக்கிறது. இடையில் வந்த 'கோச்சடையான்' அனிமேஷன் திரைப்படம், நேரடியா நான் நடித்து வரவிருக்கும் படம் 'லிங்கா'.
ஆறு மாதத்திற்கு இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய படத்தைக் கொடுக்கிறது நடக்க முடியாத ஒரு விஷயம். பெரிய நட்சத்திரங்கள், பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று இருப்பதால் சொல்லவில்லை. இந்த படத்தின் கதை பெரியது. இந்தப் படத்தோட பின்னணி பெரியது. சுதந்திரத்துக்கு முன்பு 40களில் நடக்கிற கதை.

ஒரு மிகப்பெரிய அணை கட்டறதைப் பற்றிய கதை. ரயில் சண்டைக் காட்சிகள், யானைகள், குதிரைகள் என பெரிய பட்ஜெட் படம். 'லிங்கா'வில் 60 காட்சிகள் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதில் 40 காட்சிகளில் 1000 பேர் நடித்திருக்கிறார்கள். இவ்வளவு கஷ்டத்தோடு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தப் படத்தை முடித்திருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் ரவிகுமார் மற்றும் அவரோட குழு. ஏனென்றால் நாங்கள் கடைசியில் வந்து ஷுட்டிங் முடிந்தவுடன் கிளம்பி விடுவோம். ஆனால், தொழில்நுட்ப கலைஞர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
'லிங்கா'வில் மூன்று ஆச்சர்யங்கள் இருக்கிறது. முதல் ஆச்சர்யம் ஏ.ஆர்.ரஹ்மான், ரத்னவேலு, சாபு சிரில், அனுஷ்கா, சோனாக்‌ஷி என ரொம்ப பிஸியானவர்கள் இருப்பது முதல் ஆச்சர்யம். அது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.

இரண்டாவது ஆச்சர்யம்... இந்தப் படத்தோட கதை என்னுடையது என்று சில பேர் வழக்கு போட்டிருக்கிறார்கள். ட்விட்டர் தளத்தில் ஒன்று படித்தேன். ரஜினி படத்தில் கதை இருக்கா, அப்படி அவரோட படத்துல கதை இருந்தால், அதை நாலு பேர் அவங்க கதைன்னு சொன்னாங்கன்னா நான் போய் அந்தப் படத்தை முதல்ல பார்க்கிறேன் என்று ஒருவர் எழுதி இருந்தார்.

உண்மையில், இந்தப் படத்தில் சிறப்பான கதை இருக்கு. அந்த நாலு பேரோட கதையில்லை. இந்தப் படத்தோட கதை பொன் குமரனுடையது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த கதை. இதை மாதிரி ஒரு கதையில் நான் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம்.

மூன்றாவது ஆச்சர்யம்... நான் இந்த படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அது சண்டைக் காட்சிகளில் நடித்தது கிடையாது. ரயில் சண்டை, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி அதெல்லாம் கூட கிடையாது. இங்க இருக்கிறவங்களோட டூயட் பாடினது தான் அந்தக் கஷ்டம். சத்தியமாக சொல்றேன் சோனாக்‌ஷி உடன் டூயட் பாடினது எல்லாம் ரொம்ப கஷ்டம். சின்னக் குழந்தையா இருக்கும் போது சோனாக்‌ஷியைப் பார்த்தது. என் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா கூட வளர்ந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்ன உடனே எனக்கு வியர்த்து கொட்டிவிட்டது. என் முதல் படம் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்தபோது கூட இந்தளவிற்கு டென்ஷன் இருந்ததில்லை. கடவுள் நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைத்தார் என்றால், 60 வயதில் நடிகர்களுக்கு டூயட் பாடுற தண்டனையைக் கொடுக்கலாம்.

ஹாலிவுட்டில் கூட பெரிய பெரிய படங்கள் வருகிறது. அங்கெல்லாம் ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், ஷூட்டிங் போய்விட்டால் நாலைந்து மாதங்களில் முடித்துவிடுவார்கள். அதை இங்கேயும் சொல்லலாம். ஆனால், 'பாகுபலி' வேறு மாதிரியான படம். அது இரண்டு பாகங்கள் எடுக்கிற படம், அதை நான் பார்த்திருக்கிறேன். இயக்குநர் ராஜமெளலிக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர் இந்தியாவின் நம்பர் 1 இயக்குநராக வருவார். தெலுங்கு மக்கள் எல்லோருக்கும் அந்தப் படம் மிகப் பெரிய கவுரவம். நான் வெளிப்படையா சொல்றேன். ராஜமெளலி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் கண்டிப்பாக நடிப்பேன்.
'லிங்கா' எல்லோருக்கு கண்டிப்பாக பிடிக்கும். தமிழ் மக்கள் என் படத்தைப் பார்த்து எனக்கு எப்படி ஆதரவு தருகிறோர்களோ, அதே மதிரி தெலுங்கு மக்களும் எனக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தப் படத்துக்கும் அதே மாதிரி ஆதரவு தருவாங்கனு நம்புறேன்" என்று பேசினார் ரஜினிகாந்த்.

Post a Comment

 
Top