0
ராஜபக்சே ஒரு மனிதராகவே செயல்படவில்லை, அதிகாரம் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில், வரும் ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தை ராஜபக்சே கடந்த ஆண்டு மாற்றியமைத்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க வேண்டிய தேர்தலும் முன்னதாகவே நடைபெறுகிறது. ராஜபக்சேவை எதிர்த்து அவரது அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்த மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


18 வேட்பாளர்கள்

ராஜபக்சேவை ஆதரித்து வந்த ஜாதிக ஹேல உருமயா எனப்படும் தேசிய புத்தமத பாரம்பரிய கட்சியும், பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட 18 பேர் போட்டியிடுகின்றனர்


எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட நிபுணர்கள் குழு உடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அனைவரும் பெயருக்காக அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சர்களின் செயலாளர்கள், அமைச்சர்களை கேட்டு எதனையும் செய்வதில்லை. அவர்கள், அதிபர் மாளிகையில் இருந்து வரும் உத்தரவுபடியே செயல்படுகின்றனர்.

அதிபரின் ஊழல்

அமைச்சர்களின் செயலாளர்களின் பணிகள், அதிபர் மாளிகையில் இருந்தே உத்தரவிடப்படுகின்றன. இந்த நிலையில் ஊழல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு எதிராக நான் குரல் கொடுத்தபோது எனக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிபர் ராஜபக்சே தற்போது மாறிவிட்டார். அவர் ஒரு மனிதராக செயல்படவில்லை. அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்" என்று மேலும் குற்றம் சாட்டினார்.


பிரசாரத்தில் அனல்

இந்த நிலையில் மைத்ரிபால சிறிசேன செவ்வாய்கிழமை மாலை கண்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்பு ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக தெரிவித்தார். தற்போது அரசு துறையில் ஊழல் மோசடிகள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், அரசியல் தலையீடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

இதனிடையே கண்டியில் நடைபெற்ற பொது வேட்டபாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய சிலர் மீது கட்டுகஸ்தோட்டையில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் ஆதரவாளர்கள் பயணம் செய்த வேன் மீது நேற்றிரவு 9.30 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

 
Top