0
முதலிரவில் புதுப்பெண் காலில் விழுந்து கதறி அழுததால் அவரை காதலனுடன் சேர்த்துவைத்தார் புதுமாப்பிள்ளை. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (26) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த 20 நாட்களுக்கு முன் நிச்சயம் நடந்தது.

அதன்பின் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு இருவீட்டாரும் விநியோகித்தனர். கடந்த 10ம் தேதி காலை மாப்பிள்ளை வீட்டில் திருமணம் தடபுடலாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் பெண் வீட்டுக்கு மறுவீடு சென்றனர். இரவு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபின் மணமக்கள் முதலிரவு அறைக்கு சென்றனர். அப்போது திடீரென நந்தகுமாரின் காலில் தேவி விழுந்து கதறி அழுதார்.

அதிர்ச்சியடைந்த நந்தகுமார், விசாரித்தார். அப்போது தேவி, ‘நானும், எங்கள் ஊரை சேர்ந்த லாரி டிரைவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன். என்னை அவருடன் சேர்த்து வைக்காவிட்டால் செத்துவிடுவேன்‘ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். நந்தகுமாரும் விடிய விடிய யோசித்துள்ளார். இறுதியில் காதலனுடன், மனைவியை சேர்த்து வைக்க முடிவு செய்தார். மறுநாள் காலை இரு வீட்டாரும் கூடி பேசினர். அப்போது தேவியை, அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைப்பது என முடிவானது. திருமண செலவுத்தொகையான யி1 லட்சத்தை பெண்ணின் பெற்றோரோ அல்லது காதலனோ நந்தகுமார் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் இதுகுறித்து எழுதி வாங்க துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு குடும்பத்தினரும் நேற்று மாலை சென்றனர். ஆனால் இருவரையும் சேர்த்து வைக்க முடியுமே தவிர, தங்களால் பிரித்து வைக்க எழுதி வாங்க முடியாது என்று கூறி போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதுகுறித்து வேலை விஷயமாக லாரியில் வெளியூர் சென்றிருந்த தேவியின் காதலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். பின்னர் காதலனுடன் தேவிக்கு நேற்று காலை துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் திருமணம் நடந்தது. தாலி கட்டிய மனைவியை  காதலனுக்கே திருமணம் செய்து வைத்த நந்தகுமாரின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டினர். 

Post a Comment

 
Top