0
ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்.

ரஜினிகாந்துடன் நடித்தை பெருமையாக கருதுவதாக சோனாக்ஷி தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

நான் சினிமாவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கல்லூரி முடித்த காலத்தில் நான் கவர்ச்சியாக இருக்க மாட்டேன். குண்டு பெண்ணாக இருந்தேன். 2008–ல் ‘லேக்மா’ (முக கிரீம்) விளம்பர படத்தில் குண்டு பெண்ணாகவே நடித்தேன்.

அதன் பிறகு நடிகர் சல்மான்கான் தனது ‘தபான்’ படத்தில் நடிக்க என்னை அழைத்தார். எத்தனையே முன்னணி ஹீரோக்கள் இருக்கும்போது குண்டு பெண்ணான என்னை ஏன் அழைத்தார் என்று எனக்கு புரியவில்லை. இருந்தாலும் நான் ஒத்துக் கொண்டேன்.

முதல் ஷூட்டிங் நடந்தபோது என்ன இவ்வளவு குண்டு பெண்ணை கதாநாயகியாக போட்டு உள்ளார்களே என்று பலரும் கேலி பேசினர். முதலில் இதுபற்றி எதுவும் சொல்லாத சல்மான்கான் பின்னர் உனது எடையை 30 கிலோ குறைக்க வேண்டும் என்றார்.

படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டதால் எனது எடையை குறைக்க முடிவு செய்தேன். இதற்காக வீட்டிலேயே ஜிம்முக்கு ஏற்பாடு செய்தேன். இரவு பகலாக உடற்பயிற்சி செய்தேன். உணவை குறைத்து அதில் கட்டுப்பாடு விதித்தேன். 40 நாளில் 30 கிலோ குறைத்தேன். அதைப் பார்த்து சல்மான்கானே என்னை பாராட்டினார்.

அந்த சினிமா ரிலீஸ் ஆன பின்பு என்னை கேலி பேசியவர்கள் அனைவரும் வாயடைத்து போனார்கள். எனது நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அதன் பிறகுதான் ஒருவருக்கு அழகைவிட தன்னம்பிக்கைதான் முக்கியம் என்று கருதினேன். எனது படம் தோற்றால்கூட தன்னம்பிக்கையால் நான் வெற்றி பெற்று விடுவேன்.

எனது தன்னம்பிக்கைதான் தென் இந்தியாவில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை படத்தில் நடித்தாலும் ரஜினியுடன் நடித்தது எனக்கு புதிய அனுபவம் மட்டும் அல்ல புதிதாக நடிப்பது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் எனது அப்பா (சத்ருகன்சின்கா) மிகுந்த சந்தோஷம் அடைந்தார். ரஜினிகாந்தும் எனது அப்பாவும் சிறந்த நண்பர்கள். இருவரும் இந்தியில் அஸ்லி–நக்லி (அசலும், நகலும்) படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் ரிலீசான ஒரு வருடத்தில்தான் நான் பிறந்தேன்.

ரஜினியுடன் நான் நடிக்கிறேன் என்றதும் எனது அப்பா அவரை புகழ்ந்து தள்ளினார். ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, எளிமையானவர், கட்டுப்பாடுமிக்கவர், பக்திமான் என்று அடுக்கிக்கொண்டே போனார். உங்கள் நண்பர் ஆச்சே? எப்படி விட்டு கொடுப்பீர்கள்? என்று நான்கூட கேலியாக பேசினேன்.

ஆனால் அவருடன் நடித்தபோது தான் ரஜினி பற்றி அப்பா கூறியது எவ்வளவு உண்மையானது என்பது புரிந்து கொண்டேன். அவரிடம் ரசிகர்கள் அன்பு மட்டும் காட்டாமல் பைத்தியமாக இருப்பது ஏன்? என்பதை தெரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பின் போது ‘பேக்கப்’ என்றதும் அனைத்து ஹீரோக்களும் உடனடியாக சென்று விடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அவர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை பாராட்டியதும், நலன் விசாரித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை பற்றி அப்பா சொன்னது கொஞ்சம்தான் என தெரிந்தது.

ரஜினியுடன் நடிக்கும் போது முதலில் எனக்கு வெட்கமாக இருந்தது. ரஜினி தான் எனக்கு உற்சாகமூட்டினார். எனது நண்பர் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க நான்தான் வெட்கப்பட வேண்டும். நீ வெட்கப்படுகிறாயே எனக் கூறி எனக்கு தைரியமூட்டினார்.

நடிக்கும்போது பெரியவர்கள், சிறியவர்கள் என்று பார்க்ககூடாது என்று அறிவுரை வழங்கினார். என்னை பாலிவுட் நடிகை என்கிறார்கள். ஆனால் லிங்கா படத்தில் நான் தென்இந்திய நடிகையாகவே மாறி இருப்பதை அனைவரும் உணருவார்கள்.

தென் இந்திய இயக்குனர்களான பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தி படங்களில் நான் ஏற்கனவே நடித்து உள்ளேன். வடஇந்திய படங்கள் முடிய நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் தென் இந்திய படங்கள் விரைவாக முடித்து விடுவார்கள்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு மொழி தெரியாததால் அதனை புரிந்து நடிப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படத்தை உனக்காகத்தான் மெதுவாக எடுக்கிறோம் என்றனர்.

எனது நடிப்பை ரஜினிகாந்த் அணு அணுவாக பாராட்டி உற்சாகப்படுத்தினார். எனக்கு தெரியாததை சொல்லி கொடுத்தார். எனது உண்மையான ரசிகர்கள் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாதான். எனது நடிப்பின் நிறை, குறைகளை உடனே சுட்டிக்காட்டி விமர்சிப்பார்கள். அவர்களை நான் பீபி (அக்காள்) என்றே அழைப்பேன்.

லிங்கா படத்தில் 1940–ம் ஆண்டு நடக்கும் கதையின் கதாநாயகி என்பதால் ஜாக்கெட் இல்லாமல் என்னை நடிக்க சொன்னார்கள். 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் என்பதால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தேன். நீச்சல் உடையில் கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது. அப்புறம் பழகி விட்டது.

அந்த வேடத்தில் எனக்கு பேச்சு குறைவு. கண்களாலே பேசி நடிக்க வேண்டும். எனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டினார். இதனை ஒரு சவாலாக செய்து முடித்தேன். படம் ரிலீஸ் ஆனதும் என்னை தென் இந்திய நடிகை என்றே பலர் கூறுவார்கள்.

இவ்வாறு சோனாக்ஷி கூறினார்.

Post a Comment

 
Top