இந்திய சினிமாவில் முதல் முறையாக ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படம் ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காப்பீடு படத்தின் தயாரிப்பு செலவான ரூ.100கோடி மற்றும் படத்துக்கு எதிர்ப்பாராமல் நேரும் விபத்து ஆகியவற்றுக்கான இழப்பீடுகளை உள்ளடக்கியதாகும்.
அல்லயன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இந்தப் படம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மீடியா தலைவர் சுமந்த் சலியன் கூறுகையில், “யாரும் எதிர்ப்பார்க்காத குறுகிய காலத்தில் ரஜினியின் ‘லிங்கா’ படம் உருவாகியுள்ளது. இந்த அளவு பெரிய தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் ‘லிங்கா’தான். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏற்படும் வருவாய் இழப்பையும் இந்த ரூ.200கோடி காப்பீடு ஈடு செய்யும்” என்றார்.
குறித்த நேரத்தில் எந்த காரணத்துக்காகவாவது படத்தை வெளியிட முடியாமல் போனாலோ, மோசமான காலநிலை, இயற்கைப் பேரிடரால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் படம் பாதிக்கப்பட்டாலோ இந்த காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைத்து விடும்.
இந்திய சினிமாவில் காப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்தது 1990களில்தான். ‘கல்நாயக்’ படத்துக்குத்தான் முதல் முறையாக காப்பீடு செய்யப்பட்டது. ரூ.100 கோடி பட்ஜெட் கொண்ட படத்துக்கு ரூ.80லட்சம் வரை காப்பீட்டு முனைமம் (பிரிமியம்) கட்ட வேண்டுமாம்.
Post a Comment