எல்லாம் வல்ல சர்வேஸ்வரராக விளங்கும் சிவபிரானுக்கும் மோகினி வடிவம் எடுத்த திருமாலுக்கும் மகனாக அவதரித்தவர் மணிகண்டன்.
கழுத்தில் மணிமாலையுடன் காணப்பட்டதால் மணிகண்டன் என பெயர் பெற்றார். ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரராக பிறந்ததால் ஹரிஹரபுத்திரர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஐயனுக்கும் அப்பனுக்கும் உதித்ததால் ஐயப்பன் ஆக பெயர் பெற்றார். சபரிமலையில் அமர்ந்து ஞான ஆட்சியுடன் அருளாட்சி புரிந்து மானிடர்களின் பிறவித்துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார். சபரிகீரிசன் சாஸ்தாவாக பதினெட்டு படிகளுடன் கூடிய சபரிமலை திருத்தலத்தில் வீற்றிருந்து வேண்டுவார்க்கு விரும்பிய வரம் அருளி எம்மைக் காத்து வருகிறார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தால் அது குழந்தை, வாரிசு, சந்ததி தழைக்க குடும்பம் உருவாக காரணமாகிறது. ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கிற குழந்தை இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை வடிவில் தேவர் குலத்தைக் காக்க என மணிகண்டனாக ஹரிஹரனாக அவதாரம் எடுத்தார். மும்மூர்த்திகளான சிவனும் பிரமனும் விஷ்ணுவும் கடும்தவம் இருந்து யார் வரத்தைக் கேட்டாலும் மனமிரங்கி அவர் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு திண்டாடுவது அவர்களின் வழக்கமான ஒன்று என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.
ஆக அன்னை ஆதி பராசக்தியால் கொடிய அரக்கன் மகிஷாசுரன் அழிக்கப்பட, அவனது தங்கை மகிஷி கடும் சினம் அடைந்தாள். தேவர்குலத்தை பூண்டோடு அழிக்கவும் பழிவாங்கும் எண்ணத்திலும் சிருஷ்டிக்கடவுளான பிரம்ம தேவரை நோக்கி அடர்ந்த காட்டில் கருங்கற்பாறையில் அமர்ந்து கடும் தவம் இயற்றினாள். பிரம்மதேவர் அவளை நோக்கி என்னவரம் வேண்டும் எனக்கேட்க மகிஷி கூறினாள், அரிக்கும் அரனுக்கும் மகனாக பிறந்து வேறு ஒருவரிடத்து வளர்ந்த ஒருவனை தவிர ஆயுதங்களாலும் சாதாரண மானிடர்களாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. எனது உரோமங்களில் இருந்து என்னைப்போன்று ஆயிரக்கணக்காணோர் உற்பத்தியாகி எதிரிகளை அழிக்க வேண்டும். எனவும் வேண்டுகிறாள்.
பிரம்மரும் வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விட்டார். தேவர்களையும் ரிஷிகளையும் மானிடர்களையும் வருத்த தொடங்கி விட்டாள் அசுரகுலத்து மகிஷி. அவள் படுத்திய துன்பங்களை தாங்க முடியாத தேவர்கள் காத்தற்கடவுளாகிய ஹரியிடம் சென்று முறையிட்டனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை. அதோடு வரங்கள் பெறுவதும் அதனால் சாபங்கள் அடையப் பெற்று அல்லல் உறுவதும் இயல்பு. அப்படி முன்னொரு காலவேளையில் தேவர்கள் துர்வாச முனிவரின் சாபம் அடையப் பெற்று உடல் பலவீனம் அடைந்து தளர்ச்சி உற்று முதியவர் நிலையினை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. இதை பயன் படுத்தி மகிஷி துன்புறுத்த தேவர்கள் விஷ்ணுவைச் சரண் அடைந்தனர்.
காத்தற்கடவுளாகிய விஷ்ணு பகவானும் தேவர்கள் மிகுந்த வலிமை பெற திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் உண்டால் சக்தி கிடைக்கும் எனவழியைக் காட்டினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடைந்தனர். அமிர்தம் தோன்றியது. அசுரர்கள் தேவர்களுக்கு அவ்வமுதினை பகிர்ந்தளித்து உண்ண விரும்பாமல் தாமே உண்ண விரும்பி திருவமுதினை பறித்து எடுத்தனர்.
மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டி மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை தன்பால் மோகம் கொள்ள வைத்து அமுதினை பெற்று தேவர்களுக்கு அளிக்கிறார். தேவர்களும் அமிர்தத்தை உண்டு இழந்த சக்தியை மீண்டும் பெற்றனர். இதை அறிந்த ஈசன் மூவுலகமும் மையல் கொள்ளும் வதனத்தை அந்த மோகினி வடிவத்தை காண ஆவலுற்றார். மோகினி வதனத்தை கண்ணுற்ற ஈசன் அவ்வுருவில் மோகித்து மையல் கொண்டார்.
கன்னி உருக்கொண்ட திருமாலுக்கும் பரமசிவனுக்கும் உதித்த குழந்தையை பம்பா நதிக்கரையில் விட்டுசென்று விட பந்தள நாட்டு மகாராஜா எடுத்து அன்போடு வளர்க்கிறார். குழந்தை இல்லாகுறை போக்கிய அக்குழந்தையை மனிகண்டனாக எல்லாக் கலைகளையும் பயிற்றுவித்து வளர்க்கிறார். காலம் கணிந்து வர தேவேந்திரன் ஹரிகரன் காட்டுக்குள் வந்ததையும் அவர் பூர்வீகத்தையும் அறிந்து மகிஷி அரக்கியை அழித்துவிடுமாறு வேண்டிக் கொள்ள தேவர்கள் புடைசூழ அரக்கியை வதம் செய்து அனைவரையும் காக்கிறார்.
இளம் பாலகனாக பனிரெண்டு வயதிலேயே அரக்கியை அழித்து தேவர்களை காத்த ஸ்ரீ சாஸ்தாவாகிய ஐயன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னை தலைவலியை போக்க என்னசெய்வது எனஎண்ணம் கொண்டார். தேவர்களின் அரசன் தேவேந்திரனிடம் அன்னை தனது பிணி தீர்க்க புலிப்பால் கொண்டு வர என்னை காட்டுக்கு அனுப்பினார்கள். நான் என் செய்வேன் எனக்கேட்க தேவேந்திரனும் உடனே பெண் புலியாக உருமாறினார். அதன் மீது ஏறி அமர்ந்து மணிகண்டனும் ஏனைய தேவர்களும் புலிக்கூட்டமாக உருமாறி பந்தளநாடு நோக்கி சென்றனர். புலி மீது பாலகனான மணிகண்டனைப் பார்த்து அஞ்சினர்.
மன்னன் இராஐசேகரன் மகனின் துணிவைப் பாராட்டி ஆரத்தழுவினார். அமைச்சர் மனதில் தீய எண்ணங்களுடன் அரசிக்கு அவளின் இளைய மகனுக்கு மூடிசூட்ட ஆசையை வளர்த்து இல்லாத தலைவலியை ஏற்படுத்தியிருந்தார்.
அதனால் மணிகண்டன் புலியுடன் வந்ததும் தவறுக்கு மன்னித்து மண்றாடினர். பன்னிரெண்டு காலம் என்னை வளர்த்து காத்து வந்தீர்கள். நாடாளும் எண்ணம் எனக்கில்லை எனக்கூறி தம்பி இராஜேந்திரனுக்கு முடிசூட்டி இளவரசன் ஆக்குங்கள் இது எனது விருப்பம் ஆகும். பூவுலகில் அவதாரம் எடுத்த எனது நோக்கம் நிறைவேறிவிட்டது வருகிறேன் என்று புறப்பட்டார்.
மன்னன் முதல் அனைவரும் கலங்கி நின்றனர். அன்பு தந்தையே ஆசி கூறுங்கள் சபரி மலைப் பகுதியில் பம்பை நதிக்கரையில் ஒரு அம்பை எய்கிறேன். அந்தச் சரங்குத்தும் இடத்தில் ஆலயம் எழுப்பி என் திரு உருவை பிரதிஸ்டை செய்யுங்கள். என்னை வழிபடும் அடியார்களுக்கு ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி அன்று நான் ஒளிவடிவில் பொன்னம்பலமேட்டில் திருக்காட்சியளிப்பேன் என்று மறைந்தருளினார்.
ஆலயம் எழுப்பி பதினெட்டு படிகளும் அமைத்து ஐயப்பனை வழிபடுபவர் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பகவான் தத்துவாதீனாக விளங்குவதையே இப் பதினெட்டுபடிகளும் உணர்த்துகின்றன. பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படும் ஐம்புலன்கள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தும் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஐம்பொறிகள் ஓசை ஊறு ரூபம் சுவை நாற்றம் என்ற ஐந்தும், அந்தக்கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும். மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் ஆன்மாவும் என பதினெட்டு விடயங்களைக் கொண்டுள்ளது.
மேற்குறித்த பதினெட்டு விடயங்களைக் குறித்தே பதினெட்டு படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் ஸ்ரீ சாஸ்தாவாக விளங்கும் ஐயப்ப சுவாமி சபரி பீடத்தின் பதினெட்டு படிகளை கடந்து ஸ்ரீ சுவாமி ஐயப்பனின் பேருண்மைத் தத்துவத்தை பெற்று உய்வதோடு, பொன்னம்பல மேட்டில் தை மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதி தரிசனம் கண்டு எம் பாவங்களை தீர்க்க ஐயப்பனை வணங்குவோம்.
Post a Comment