0
ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு சாகச வீரன் வந்துதான் தன்னை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளவரசிகள் பற்றிய பழைய ராணி காமிக்ஸ் கதைகள் உண்டு. இன்றைய சினிமாக்கள் அதுமாதிரியான எதிர்பார்ப்பு கொண்ட சமூகத்தையும் அவர்கள் எதிர்பார்க்கும் இளவரசன்களாக சினிமா கதாநாயகர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான  ஒரு கதை அமைப்பில் கத்தி திரைப்படம் வெளியாகி இருக்கிறது.



கத்தி படம் சமூக பிரச்சனையை பேசுவதாக செய்தி பரவியது. நமது சினிமாக்காரர்களின் சமூக அறிவு எவ்வளவு நுட்பமானது என்று நமக்கு தெரியும். இருந்தாலும். அதையும் பார்த்து விடுவது என்று சென்ற போதுதான் ‘பழைய மொந்தையில் புதிய கல்’ என்று தெரிந்தது. அச்சு அசலாக எம்.ஜி.ஆர். நடித்த ‘ எங்கள் வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் தழுவல். கோழை, வீரன் என்று அங்கே இரண்டு எம்.ஜி.ஆர். இங்கே இரண்டு விஜய். இரண்டு படத்திலும் சந்தர்ப்ப வசத்தில் இருக்கும் இடம் மாறி கொள்கிறார்கள். அங்கே நம்பியார் பாத்திரத்தில் இங்கே புதிய வில்லன். இரண்டு படத்திலும், மாறிவரும் கதாநாயகன் போலி என்பது தெரிய வருகிறது. இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, போலி நிஜத்தை காப்பாற்றிவிட்டு மறைந்து விடுகிறது. இதுதான்  இரண்டுக்கும் பொதுவான கதை அம்சம்.


சுமார் 50 நிமிடங்கள் படத்தில் எந்த சமூகப் பிரச்சனையும் தலைகாட்டவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் வாக்காளர்களாகப் போகும் பிஞ்சுகளை குஷிபடுத்தும் விஜயின் வழக்கமான உடல் மொழி சேட்டைகளும், ஆபாசம் தெறிக்கும் குத்துப்பாடலுமாகவே படம் போகிறது. கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்து வந்த விஜய் கருப்பு என்ற முருகானந்தமாக வருகிறார். 50 நிமிடங்களுக்கு பிறகு சமூக பொறுப்பு கொண்ட ஆனால் ஆளுமையும், போராடும் திறனுமற்ற புதிய விஜய் ஜீவாவாக அறிமுகமாகிறார். கம்யூனிச தோழர் பா. ஜீவானந்தத்தை நினைவு கூறும் விதமாக ஜீவானந்தம் என்ற ஜீவாவாக அறிமுகமாகிறார். அவர் ஒரு விபத்தில் சிக்க விவசாயிகளுக்காக போராடும் அவரை பன்னாட்டு நிறுவன முதலாளியின் கூலிப்படை துரத்துகிறது. ஜீவாவின் கார் விபத்துக்குளாக  கூலிப்படை சுட்டு விட்டு செல்கிறது. மயக்கத்தில் இருக்கும் ஜீவாவை முருகானந்தம் மருத்துவமனையில் சேர்த்து விட்டு தனது உடைமைகளையும் ஜீவாவின் அருகில் வைத்துச் செல்கிறார். கொல்கத்தா காவல் துறை தமிழகம் வந்து உடமைகளை வைத்து முருகானந்தத்திற்கு பதில் ஜீவாவை கைது செய்கிறது.


பின்னர், முருகானந்தத்தை ஜீவா என்று நினைத்து கலெக்டர் முதல் பன்னாட்டு தொழில் முதலாளி வரை நம்பி ஏமாறுவது தான் கதை. கதையின் திருப்பமாக, லயன்ஸ் கிளப், விசயாயிகளுக்கான ஜீவாவின் போராட்டத்தை கௌரவித்து விருதும் 25 லட்சம் ரூபாய் நன்கொடையும் கொடுக்கிறது. ஜீவாவிற்கு பதிலாக செல்லும் முருகானந்தம் ஜீவாவின் தியாகத்தையும், கிராமங்களில் விவசாயிகளுக்கு இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும் புரிந்து கொள்கிரார். லயன்ஸ் கிளப்பில் கிடைக்கும் 25 லட்சத்தோடு ஒடிபோகும் தனது திருடன் புத்தியை மாற்றிக் கொண்டு ஜீவா இருந்து செய்ய வேண்டியதை முருகானந்தம் செய்து முடிக்கிறார். வில்லன் கதையையும் முடிக்கிறார். முருகானந்தம், சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ள எதார்த்தங்களை மீறிய கற்பனை உத்திகளை கையாள்கிறார். நெல்லையில் தன்னூத்து என்ற கிராமத்தில் பூமிக்கு அடியில் இருக்கும் நீருற்றை வெளியே கொண்டு வந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியும் என்பதை ஜீவா கண்டு பிடிக்கிறார். அதை தெரிந்து கொள்ளும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று அந்த கிராம விவசாயிகளிடம் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்க முயற்சிக்கிறது. அந்த தண்ணீர் கொண்டு குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை முருகானந்தம் எனும் விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பது கதையின் முடிவு.


முற்றிலும் சினிமாதனத்தை கொண்டு பேசப்பட்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனை இது. ஆனால் விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளை பேசவே இல்லை.


விவசாயிகளின் பிரச்சனைகளில் முக்கியமானது கடன் சுமைதான். தவிர உர விலையேற்றம், நியாயமான கொள்முதல் விலை இல்லாமை. வறட்சியான காலங்களில் நிவாரணம் இன்மை, நிவாரணம் கொடுப்பதில் உள்ளூர் அரசியல் தலையீடு, அதை பெறுவதற்கு கொடுக்கும் லஞ்சம் என்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். நாட்டில் உற்பத்தியாகும் தண்ணிரை முறையாக தேக்கி, அனைத்து பரப்புக்கும் கால்வாய்களை வெட்டி, குளங்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே விவசாயத்துக்கான தண்ணீர் தேவை கணிசமாக குறைந்து விடும். விவசாயிகளுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை பெருவர்த்தக நோக்கத்தில் மரபணு மாற்ற விதைகளை அரசு இறக்குமதி செய்வது. இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் பற்றி எதையும் படம் பேசவில்லை.


தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிட்டால் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதாக கதை சுருக்கப்பட்டிருப்பது விவசாயிகளின் உண்மையான பிரச்சனை பற்றி இயக்குனர் முருகதாசுக்கு எதுவும் தெரியவில்லையென்பதை தான் காட்டுகிறது. ஒரு விவசாயி ஒரு ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்வதால் 30 மூட்டைகள் நெல் உற்பத்தி செய்யலாம். இப்போது மூடை 900 முதல் 1000 ரூபாய் வரை விலை இருக்கிறது. அப்படியென்றால் அதிகபட்சம் 30,000 ஈட்டலாம். ஒரு ஏக்கர் பரப்புக்கு ஆகும் செலவு 15000 ரூபாய் என்றால் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பில் கிடைக்கும் லாபம் 15000 ரூபாய்தான். இது ஆறுமாத கணக்குக்கு. வருடத்திற்கு அவர் இரண்டு பருவம் விவசாயம் செய்வதால் அவரது நிகரலாபம்  ஆண்டுக்கு வெறும் 30,000 ரூபாய்தான். மாதத்திற்கு 2,500 ரூபாய் என கணக்கு வருகிறது. ஒரு விவசாயி ஒருஏக்கர் பரப்பில் காலத்துக்கும் விவசாயம் செய்து மாதத்திற்கு 2,500 ரூபாய் மட்டும் பயனீட்டி அதற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி இருக்கிறது. மழை பொய்த்தாலோ, பயிர் விளைச்சல் குறைந்தாலோ, உரம், பூச்சிமருந்து விலைகள் ஏறினாலோ கொள்முதல் விலை குறைந்தாலோ அதன் இழப்பையும் அந்த விவசாயிதான் தாங்கவேண்டும்.



ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு அந்நிலம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் 2500 ரூபாய் தான் தரமுடியும் என்றால், நாட்டில் 60 சதவீதமான விவசாயிகள் அரை ஏக்கருக்கும் குறைவான நிலம்தான் வைத்துள்ளார்கள். அவர்கள் சராசரி மாத வருமானமாக வகுபடும் தொகை 1250 ரூபாய்தான். அதனினும் சிறிய துண்டு துக்கடா நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் கணக்கிட்டுப் பாருங்கள். அவர்கள் அந்நிலத்தில் 100 வருடங்கள் 3 தலைமுறைகள் பயிர் செய்தால் 30 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால், அதே நிலத்தை, தான் வாழும் காலத்திலேயே விற்று 30 லட்சத்தை சம்பாதிக்க முடியும். இரண்டில் எதை செய்ய ஒரு விவசாயி விருப்புவான்? தண்ணீர் இல்லாத நிலங்களை மட்டும் இல்லை. உபரியாக தண்ணீர் வசதி உள்ள நிலங்களையே விற்று கோடி ரூபாய் ஈட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அதன் பின்னே இருப்பது  நிகழ் தலைமுறையிலேயே கொள்ளை ஆதாயம் அடையும் நோக்கம்தான். அதற்காக விவசாயிகளே பயிர் செய்யாமல்  நிலத்தை காயப்போட்டு விட்டு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, நஞ்செய் நிலத்தை புன்செய் நிலம் என்று சான்றிதழ் வாங்கி, நல்ல ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்க தயாராக இருக்கிறார்கள். தாராளமயமும், தனியார்மயமும் அதற்கான வாசலை திறந்திருக்கிறது. இதனை தடுப்பதற்காக மத்திய அரசு விவசாய நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு விற்பதற்கு தடை விதிக்கும் மசோதா ஒன்றை போன ஆட்சியிலேயே கொண்டு வந்தது. ஆனால் அது இன்னும் நிறை வேற்றப்படவில்லை.


தவிர, 5 முதல் 10 ஏக்கரில் அணைக்கட்டு பாசனத்தில் பயிர் செய்யும் விவசாயிகள் வருடத்திற்கு 3 முதல் 5 லட்சம் வரை பயனீட்டுகிறார்கள். 100 முதல் 5000 ஏக்கர் வரை வைத்து அதிக பயனீட்டும் பண்ணையார் விவசாயிகளும் இருக்கிறார்கள். மழையளவு போதுமானதாக இருந்து, முறையான காலத்தில் தண்ணீர் திறந்து விட்டால் பெரிய பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிக்கு பாதிப்பு இல்லை. எல்லாம் சரியாக அமைந்தாலும் சிறு, குறு நில விவசாயிகள் எப்பயனும் அடைய முடியாது. அவர்கள் தற்கொலைக்குப் பின்னால் இருப்பது விவசாயம் தோற்பது காரணமல்ல. அவர்கள் வைத்திருக்கும் நிலம் போதிய பயனை ஈட்டி தராததுதான் காரணம். அவர்களுக்கு விவசாயம் போக மாற்று தொழிலுக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் போதிய பயனில்லாத சிறு, குறு விவசாயிகளுக்காக கொண்டு பரப்பட்டதுதான். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை முடித்து வைக்கும் யோசனையில் மத்திய அரசு இருக்கிறது. அதனால் தான் கத்தி படம் விவசாயிகளின் உண்மையான பிரச்சனையை பேசவில்லை என்கிறோம்.


தன்னூத்து கிராமத்தில் தண்ணீர்  உறிஞ்சி குளிர்பானம் தயாரிக்க வரும் ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு நிலங்களை விற்க அவ்வூர் விவசாயிகளே தயாராக இருப்பதையும் படம் பேசுகிறது. தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்து பயனில்லாத குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள்தான் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அரை ஏக்கர், கால் ஏக்கர் நிலத்தை வைத்து எப்படி பிழைப்பு நடத்துவது என்று கருதி அந்நிலங்களை விற்று வெளிநாடு செல்கிறார்கள் என்பது தான் நிஜம்.


ஆனால் கதையில், வெளிநாட்டில் கூலி வேலைக்கு சென்ற 15000 இளைஞர்கள், தண்ணீர் கிடைத்தால் ஊருக்கு திரும்பி வந்து தாங்கள் விவசாயமே செய்ய விருப்பம் தெரிவிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால், உண்மையில், அதிக பயனீட்டும் ஒரு விவசாயிகூட தன் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பதை விட மருத்துவம், பொறியியல் படித்து கௌரவமாக வாழ விரும்புகிறார்கள். அப்படியாக படித்து உயர்ந்து, வாழ்க்கை சூழலும், தரமும் மாறிப் போனவர்கள் தங்கள் முன்னோர்கள் பிழைத்து வந்த விவசாய தொழிலை வெறுப்பதுடன் அவற்றையும் விற்று மண்ணை சில்லறையாக்க விரும்புகிறார்கள். விவசாய நிலங்கள் சொத்து வர்த்தகமாவதில் இவர்களின் பங்கு கணிசமானது.


நாம் ஒரு உண்மையை பேசியாக வேண்டும். வருடம் தோறும் உணவு உற்பத்தி செய்யும் பரப்பு சுருங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவு தானிய உற்பத்தி குறைந்து உணவுக்கு பஞ்சம் ஏற்பட்டால்தான் மக்கள் விவசாயத்தின் மீது மதிப்பும் கவனமும் தருவார்கள்.ஆனால் சூழ்நிலை மாறாக இருக்கிறது. விவசாயிகளின் வறுமையையும் போராட்டத்தையும் நகர மக்கள் கண்டு கொள்வதில்லை என்று விஜய் வசனம் பேசுகிறார். கூடங்குளத்தில் அணுமின் உலைகள் ஆபத்து குறித்து 4 ஆண்டுகளாக மீனவர்கள் போராடிவருகிறார்கள். தமிழ் நாட்டில் எந்த வர்க்கமும் திரும்பி பார்த்தது  இல்லை. கூடங்குளம், மீனவர்கள் பிரச்சனை என்று விட்டு விட்டார்கள். மீனவர் போராட்டத்தில் விவசாயிகள் ஒரு நாளாவது வந்து ஆதரவு கொடுத்திருப்பார்களா?


அணு உலை அமைக்கவும், பிற தொழிற்சாலைகள் அமைக்கவும் நிலங்களை கையகப்படுத்துவது அரசுதான். இந்த நிலம் கையகப்படுத்தும் பின்னணியில் ஆளும் கட்சியின் நகர சபை தலைவர் முதல் ஒன்றியச் செயலாளர் வரை காசு பார்க்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்காக விவசாயிகளிடம் பேரம் பேசி, ஆசை ஊட்டி நிலங்களை விற்று கொடுப்பதே அரசியல் கட்சியினர்தான்.  அரசியல் கட்சிகளில் பொறுப்பு வழங்கப்படாத, பதவி கொடுக்கப்படாத, கீழ்மட்டத்தில் இருந்து சுவரொட்டி ஒட்டும் தனது கடை நிலை தொண்டனுக்கு கட்சி தலைமை கொடுக்கும் மறைமுக சலுகை இது. அதை பற்றி கத்தி ஏன் பேசவில்லை?


அரசியல் நெடியே இல்லாத நிலையிலும்  கூட படம் வெளியே வர தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆளும் கட்சி தொலைகாட்சிக்கு படத்தை விற்று எதிர்படும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இச்சூழ்நிலையில், அரசியலால் ஏற்படும் சமூக நெருக்கடிகளை நேரடியாக பேச திரைப்படங்களுக்கு துணிச்சல் இல்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக போராட்ட களத்திற்கு வரும் திரைத்துரையினர் பிரச்சனைகளை தேர்வு செய்து கொள்கின்றனர். சமீபமாக, காவேரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனைகளுக்கு மட்டும் தான் ஒரு குழுவாக திரண்டனர். அதிலும் எத்தனை பேர் முழுமனதுடன் கலந்து கொள்கிறார்கள் என்பது கேள்விதான்?


அரசு ஆதரிக்கும் போராட்டங்களுக்கு மட்டும் தலைகாட்டும் கலை துறையினர் அரசு எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் இருந்து நழுவிக் கொள்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தண்டனை கொடுத்தபோது, நீதிபதியையும், நீதிமன்றத்தையும் கண்டித்து உண்ணா போராட்டம் நடத்திய திரை துறையினர் ஏன் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக ஒருநாள் கூட வந்ததில்லை? ஒரு அறிக்கை கூட கொடுத்ததில்லை? இதுதான் இவர்கள் சமூகப் பிரச்சனையை அணுகும் அழகு.


இந்தியாவில்  சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், சுரண்டலுக்கு எதிராகவும் தனது உடலையும், மனதையும், பொருளையும் முன்வைத்து பல பத்தாண்டுகளாக போராடியும் கூட அரசின் கொள்கைகளை மாற்ற முடியவில்லை. தேசத்தின் சொத்துகளை கொள்ளையடிப்பவர்களை தடுக்க முடியவில்லை. மேத்தா பட்கார், அருந்ததிராய், இர்ரோம் ஷர்மிளா, ப.உதயகுமார், தீஸ்தா செதல்வாத் போன்றோர் மக்களோடு மக்களாக நிற்கின்றனர். அவர்கள் அரசு பயங்கரவாதத்தையும், மாஃபியாக்கள் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டங்கள் மக்களை எளிதில் சென்றடைவதில்லை. ஆர். நல்லக்கண்ணு அய்யா மக்களை திரட்டி தாமிரபரணி பாதுகாப்பு போராட்டத்தை நடத்தினார். அரசை எதிர்த்தும் தனியார் முதலாளிகளை எதிர்த்தும் வழக்கு போட வேண்டியிருக்கிறது. அரசு போடும் பொய் வழக்குகளை எதிர் கொள்ளவும், தலைமறைவாக செல்லவும் நேரிடுகிறது. நிஜத்தில் நீதிக்கான போராட்டம் என்பது உடலை வருத்தி இரத்தக் கண்ணீர் சிந்துவது. ஆனால் ஒரு சினிமா கலைஞர் இதுபோனற எந்த வலியையும் உணராமல், 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, நிஜமான போராளிகளுக்கு கிடைக்க வேண்டிய எல்லா புகழையும் பாராட்டையும் இரண்டரை மணிநேர சினிமா மூலம் தட்டிச் செல்வது மிகவும் ஆபத்தானது, அபத்தமானது.

கத்தி படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் விஜய் கம்யூனிசம் பேசுகிறார்; “உன் பசி ஆறிய பிறகுள்ள இட்டிலி வேரொருவனுக்கு உரியது!” – என்கிறார். கம்யூனிசத்தை ஒரு ஃபேசனாக பேசுவது சினிமாவில் ஒரு கலையாக பின்பற்றப்படுகிறது. மேலும் சமூக பொறுப்பு கம்யூனிஸம் பேசுவோருக்கு மட்டும் தான் இருக்கிறது என்ற பொய் தோற்றம் உருவாக்கப்படுகிறது. இயக்குனர் முருகதாசும் இந்த பொய்யான புனைவுக்குள் சிக்கியுள்ளார். இவர்கள் சமூகத்தையோ, போராளிகளையோ வாசிப்பதில்லை என்பதே காரணம்.


சினிமா சொன்ன சமூகப் பிரச்சனைகளும் நல்ல செய்திகளும் மக்களை சென்றடையவில்லை. மாறாக தீய செய்திகள் அதிகமாகவே மக்களை ஆதிக்கம் செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஆளுமையாக இருந்தார். என்றாலும் அவர் படங்களில் ‘தான்’ என்ற அகம்பாவத்தை கற்றுக் கொடுத்ததில்லை. அன்று படத்தை இயக்க வந்தவர்களுக்கும் அத்தகைய ஒழுக்கம் இருந்தது. ஆனால் ரஜினியை வைத்து எடுத்த படங்களில்தான், ‘தான்’ என்ற அகம்பாவம் கொண்ட கதைகள் வர்த்தக ரீதியில் உருவாக்கப்பட்டன. அதற்கான உடல் மொழியும், முக பாவனையும் அவருக்கு நேர்த்தியாக அமைந்திருந்தது. சரியாக 80 களுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளிடத்தில் பெற்றோருக்கும் பெரியோருக்கும் மரியாதை தராத ‘அகம்’ ஏற்பட்டதை கணக்கிட முடியும். அது தற்போது நடிகர் விஜய் மூலம் தொடர்வதாக தெரிகிறது.


ஒரு மனிதனின் சொல், செயல், நடை, உடை, பார்வை பாவனை ஆகிய அம்சங்களில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். ஆனால் நமது கதாநாயகர்களின் பாவனைகளில் அக மற்றும் புற ஒழுக்கம் வெளிப்படுவதில்லை. அது இளம் சிறார் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பின்னர் அவர்கள் அதே மனபோக்கில் வளர்ந்து வாலிபமாகின்றனர். இன்று சினிமா சமூகத்திற்கு தந்திருக்கும் பிரச்சனை இது. படம் எடுக்கும் இயக்குனர்கள், வசனம் எழுதுபவர்கள், தாங்கள் கூர்தீட்டும் வசனம் மற்றும் கதைகள் மூலம் நடிகர்களிடம் பாராட்டும், தொடர் பட வாய்ப்பும் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவிர, சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிவே இல்லை.


இன்று சமூகத்தின் வளமான பிரமுகர்கள் நொருக்குத் தீனியுடன் சமூக பிரச்சனைகளையும் மென்று முழுங்குவதற்கும், இன்றைய சினிமா, சமூக பிரச்சனை பேசுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. பிரச்சனைபற்றி சினைமாவில் பேசுவதற்கு பதில், சினிமாவில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக சமூகத்தில் பரவிகிடக்கும் ஒரு பிரச்சனையை எடுத்துக் கொள்கிறார்கள். மணிரத்தினத்தின் ரோஜா முதல் விஜயின் கத்தி வரை இதே கதை தான்.


சமூக வாழ்க்கையில் ஒரு விவசாயி எதிர் கொள்ளும் சிக்கல்களை அதன் எதார்த்ததிற்குள் போய் பேசாமல், விஜய்  எனும் பாத்திரபடைப்புகளின் நாயகனை மக்கள் மத்தியில் நிஜமான நாயகனாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியை கத்தி படம் மூலம் முருகதாஸ் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் செல்வாக்குடன் வளர்ந்து வரும் இளம் நாயகனான விஜயை அரசியல் களத்தில், அழுத்தமான தளத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தளவாடங்கள்களாக பின் நிற்கின்றன.


தாமிரபரணி ஆற்றுநீரை ஒரு குளிர்பான நிறுவனம் சுரண்டுவதாக வசனம் பேசுகிறார் விஜய். விஜயோ வசனம் எழுதிய இயக்கிய முருகதாசோ, , விவசாயிகளின் தண்ணீர்ரை உறிஞ்சி தயாரிக்கப்படும் வெளிநாட்டு குளிர் பானங்களை தங்கள் ரசிகர்கள் குடிக்க கூடாது என்று சொல்வார்களா? விஜய் சினிமாவின் வளர் இளம் பருவத்தில் பெப்சி நிறுவன விளம்பரத்தில் நடித்திருக்கிறார். உன் வயிறு நிரம்பிய போக அடுத்த  இட்டிலி வேறொருவனுடைய என்று வசனம் பேசும் விஜய், இயக்கிய முருகதாஸ் இந்த படத்திற்கு வெள்ளையாகவும் கருப்பாகவும் வாங்கிய பணம் எவ்வளவு? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? செய்துள்ள முதலீடுகள் பற்றியெல்லாம் தேசத்திற்கும் மக்களுக்கும் வெளிப்படையாக கூறுவார்களா?


பாவம்..! பீய்ந்த செருப்பை தைத்துக் கொண்டும் பேருந்துக்கு சில்லறையை எண்ணிக் கொண்டும் வாடகை ஆட்டோ பிடித்தும் போராட்ட களம் செல்பவர்களுக்கு எந்த முகவரியும் இல்லை. ஆனால், கோடிகோடியாய் சம்பாதித்துக் கொண்டு ஆடிகாரில் வாழ்பவர்களுக்கு சினிமா சில நிமிட துளிகளில் புகழையும், மக்கள் ஈர்ப்பையும் அள்ளிக் கொடுத்து விடுகிறது என்பதுதான் உண்மையான் சிக்கல். இரண்டு மணி நேர இருட்டரை வாழ்க்கை நிஜபோராளிகளை நினைவில் இருந்து மறக்கச் செய்கிறது. நடிப்பவர்களை ‘நம்ம ஆள்’ என்று உணரச் செய்கிறது. இதனால் தான் முதலில் சினிமாவை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் சொன்னாரோ என்னவோ! சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரகூடாது என்பதல்ல. சமூக அக்கறையுள்ளவர்கள் சினிமாகாரர்களாக இருப்பினும் ஜனநாயகத்தின் தலைமையை ஏற்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதியோடு வரவேண்டும். தகுதி என்பது பிரபல்யமோ, ‘நடித்து’ ஈர்க்கப்பட்ட மக்கள் பெருக்கமோ இல்லை. அது உண்மையான தகுதியாக இருக்க வேண்டும். அதற்கு தனது உடலை கருவியாக்க வேண்டும். நடிப்புக்கு அப்பால் எளிய மக்களின் போராட்ட களங்களில் தூய மனதுடன் பங்கெடுக்க வேண்டும். இது வெல்லாம் செய்யாமல், மக்கள் கதாநாயகன் (Mass Hero) என்ற புகழுரையுடன் அரசியலுக்கு வந்தால் விஜய்காந்துக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும். விஜய் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கத்தி படம் விஜயின் அரசியல் நகர்வுக்கு மற்றுமொரு நெம்பு கோல். விஜய் விவசாயிகள் பிரச்சனை பேசுவதாக அவரது ரசிகர்கள் இணைய தளங்களில் உணர்ச்சி வசப்படுகிறார்கள் சென்னையில் விஜய்க்கு சிலை வைத்து தெய்வமாக கும்பிட்டிருக்கிறார்கள். இனி வருடம் தோறும் குருபூசை செய்தாலும் செய்வார்கள். தமிழ இளம் தலைமுறைக்கு விஜய் ஒரு கலைஞனாக மட்டும் அல்ல ஒருதலைவனாகவும் அதற்கு மேல் ஒரு தெய்வமாகவும் வெளிபட்டிருக்கிறார். ஆனால் விஜய் குறைந்த பட்சம் முதல்வர் ஆவதுபற்றி கனவு கொண்டிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவரது ரசிகர் ஒருவர், பாலக்காட்டில், கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்துவிட்டு இறங்கும் போது கால் தவறி விழுந்து இறந்திருக்கிறார். ஆனால் விஜய் இதற்கெல்லாம் இன்னும் தடை சொல்லவில்லை. அவரது மவுனம் அங்கீகாரமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற சமூக பிரச்சனை பேசும் திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்றோ, இரண்டோ வரக்கூடும். இயக்குனராக மிளிர வாய்ப்பு தேடி அலையும் இணை துணை இயக்குனர்கள் விஜய் சமூக பிரச்சனைகளை பேசும் கதைகளை மூளையை திருகி எழுதிக் கொண்டு இருக்கலாம்.


கத்தி படத்தை கூர்ந்து பாருங்கள். அது விவசாயிகளின் பிரச்சனையை பேசவில்லை. விஜய்யின் சமூக பொறுப்பு பற்றி மக்கள் பேச, இதுவும் கூட விவசாயிகளின் பிரச்சனைதான் என கருதும் ஒரு கருத்து கதையில் கையாளப்பட்டிருக்கிறது.


படக்குழுவின் உண்மையான நோக்கம் அதன் இறுதி காட்சியில் இருக்கிறது. மக்களுக்கு தன்னையே அற்பணித்த ஜீவாவாகவும், சாகசத்தாலும் சாதூர்யத்தாலும் எதிரிகளை சம்காரம் செய்து, அந்த புகழை சத்தியவான் ஜீவாவுக்கு கொடுத்துவிட்டு பெரும் அற்பணிப்பு உணர்வோடு ஒதுங்கி நின்று ரசிகர்களின் கண்ணீரையும் இரக்கத்தையும் கடன் கேட்கும் முருகானந்தமாகவும் விஜய் இரண்டு பாத்திரங்களில் மக்களிடம் நெருங்கி வருகிறார். மக்கள் ஜீவாவை நோக்கி ஒடி வருவதுடன் படம் முடிவுருகிறது. அதன் பிண்ணனியில், ‘யார் பெற்ற மகனோ! இவன் யார் பெற்ற மகனோ! இவன் தான் ஆதி சிவனோ!’ என ஜேசுதாசின் குரலில் பாடல்கள் ஒலிப்பதை என்ன அர்த்தத்தில் புரிந்து கொள்ள?

Post a Comment

 
Top