0
பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருபவர் வையாபுரி. இவரிடம் முதியவர் ஒருவர் பழைய புத்தகங்களை விற்று செல்கிறார். அதில் ஒரு புத்தகத்தில் இந்த புத்தகத்தை படிக்காதீர், படித்தால் மரணம் என்று எழுதியிருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது என்று வையாபுரி படிக்கிறார். அதில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறந்து விடுவேன் என்று எழுத்தியிருக்கிறது. இதை இவர் நம்பாமல் இருக்கிறார்.

இதற்கிடையில் அந்த புத்தகத்தை ஒருவர் வாங்கிச் செல்கிறார். குறிப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வையாபுரி இறந்து விடுகிறார். அந்த புத்தகத்தை வாங்கியவரும் இறந்து விடுகிறார். இவர் குடியிருந்த வீட்டிற்கு திரைப்பட கதாசிரியரான ஸ்ரீராமும், அவரது மனைவி ஸ்ரீபிரியங்காவும் வருகிறார்கள்.

ஸ்ரீபிரியங்கா மீது இந்த வீட்டில் இறந்தவருடைய ஆவி புகுந்து விடுகிறது. ஐயர் பெண்ணான இவர் அசைவ உணவுகளை சாப்பிடுகிறார். இதை பார்க்கும் ஸ்ரீராம் அதிர்ச்சி அடைகிறார். மேலும், ஸ்ரீபிரியங்கா கற்பமாகிறார். பேய் புகுந்ததை அறியாத ஸ்ரீபிரியங்கா கருவை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார். இந்த விஷயம் ஸ்ரீராமுக்கு தெரியவர, உடனே ஸ்ரீபிரியங்காவின் தந்தையான டெல்லி கணேசுக்கு போன் செய்து வரவழைத்து அவருடன் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். ஊருக்கு சென்றவுடன் பேய் அவரை விட்டு விலகுகிறது.

பிறகு கதாசிரியரான ஸ்ரீராமிற்கு ஒரு படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஒரு பேய் படத்திற்கு உண்டான கதையை தயார் செய்து தரும்படி கேட்கிறார்கள். இதற்காக தன் வீட்டில் இருக்கும் பழைய புத்தகத்தில் இருந்து அந்த பேய் புத்தகத்தை எடுக்கிறார். அதை படித்து கதையை உருவாக்குகிறார். மறுநாள் அவரும் இறந்து விடுகிறார்.

இவர் இறந்ததை போலீஸ் விசாரிக்கிறது. இவருடைய பேக் மற்றும் புத்தகங்கள் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்கிறார்கள். அங்கு ஒரு பெண் போலீஸ் இந்த புத்தகத்தை படிக்கிறார். பிறகு அவரும் இறந்து விடுகிறார்.

இப்படி அந்த புத்தகத்தை படித்தவர் அனைவரும் இறந்து வரும் சூழ்நிலையில் ஸ்ரீபிரியங்கா, தன் கணவர் இறந்த மாதிரி வேற யாரும் இனிமேல் இறக்க கூடாது என்று முடிவு செய்து, அந்த புத்தகத்தின் பின்னணியை அறிய ஆரம்பிக்கிறார்.

இறுதியில் அந்த புத்தகத்தின் மர்மத்தை கண்டுபிடித்து இறப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகி ஸ்ரீபிரியங்காவிற்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் உடம்பினுள் பேய் புகுந்த பிறகு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பேய் புகுந்த பிறகு பெரிய இலை போட்டு சாப்பிடும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் கதாசிரியராக நடித்திருக்கும் ஸ்ரீராம் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். இடைவேளைக்குபின் இயக்குனராக நடித்திருக்கும் ரத்தன் மௌலி அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பேயை ஓட்டும் சாமியாராக வரும் நளினி தன் நடிப்பால் பளிச்சிடுகிறார். ஆனால் அவர் பேசும் லோக்கல் வசன உச்சரிப்பைதான் ஏற்க முடியவில்லை.

தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு தருகிறார்கள் என்று நினைத்து ஒரு புக்கை மட்டுமே மையக்கருவாக வைத்து கதாபாத்திரங்களை அதற்கேற்றால் போல் உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் புகழ்மணி. புக்கில் ஒரு பேய் கதை இருக்கிறது என்று சொன்ன இயக்குனர் ஆனால் கதையை கடைசி வரை சொல்லவில்லை. லாஜிக் மீறல்களை இயக்குனர் சரிசெய்திருக்கலாம். திரைக்கதையை இன்னும் சிறியதாகவே அமைத்திருக்கலாம். முகத்தில் ஒரு லைட் அடித்தால் பேய் இருக்கிறது. லைட் அனைந்தால் பேய் போய் விடுகிறது என்று அமைத்திருக்கிறார் இயக்குனர்

தாஜ் நூர், பேய் படம் என்பதாலோ மிகவும் அதிக சத்தங்களை எழுப்பி காதுகளுக்கு இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார். காசி விஸ்வாவின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘13ம் பக்கம் பார்க்க’ லாஜிக் இல்லாமல் பார்க்கலாம்.

Post a Comment

 
Top