0
தற்காப்புக் கலை  நிபுணரும் நடிகருமாக விளங்கிய புரூஸ் லீ மறைந்து 41 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் உலகெங்கும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் புரூஸ்லியின் சாயலிலேயே காணப்படுகிறார்.

அப்துல்பஸால் அப்பாஸ் ஷகூரி எனும் இந்த இளைஞர், ஆப்கானிஸ்தான் புரூஸ்லி என தன்னைத் தானே அழைத்துக்கொள்கிறார்.

20 வயதான ஷகூரி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்தவர். வெறுமனே தோற்றத்தில் மாத்திரம் இவர் புரூஸ் லீ போன்று காணப்படவில்லை.   தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்ற ஷகூரி, புரூஸ் லீயை போலவே பாய்ச்சல், உதைகள் ஆகியவற்றை மேற்கொள்கிறார்.
அப்துல்பஸால் அப்பாஸ் ஷகூரியின் புகைப்படங்கள் இணையத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளியாகியதைடுத்து அவரின் புகழ் வேகமாக பரவி வருகிறது.

தான் சிறுவயதிலிருந்து புரூஸ் லீயின் திரைப்படங்களை பார்த்து வந்ததாகவும் அவரின் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் ஷகூரி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய தற்காப்புக் கலை ஆயுதமான நான்சுக்குவை தனது திரைப்படங்களில் பயன்படுத்தியவர் புரூஸ்லீ. அவரைப் போலவே நான்சுக்குவை பயன்படுத்துவதில்  ஷகூரி ஆர்வம் செலுத்துகிறார்.

ஆனால் வூஷு எனும் தற்காப்புக் கலையிலும் அதிகம் திறமையானவராக விளங்கும் ஷகூரி காபூல் நகரில் அண்மையில் நடைபெற்ற வூஷு சுற்றுப்போட்டியில் அதிக திறமைகளை வெளிப்படுத்திய ஒருவராக திகழ்ந்தார்.

ஹொங்கொங்கைச் சேர்ந்த பெற்றோரின் மகனாக 1940.11.27 ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்த புரூஸ் லீ, 1973.07.20 ஆம் திகதி ஹொங்கொங்கில் மர்மமான முறையில் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top