0
தமிழ்நாட்டில் மட்டும் லிங்கா படத்தின் முதல் நாள் வசூல் 16 கோடி என்று கடந்த 13.12.2014 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன் பிறகு நம் கவனத்துக்கு வந்த செய்திகள் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமலும், சாத்தியமில்லாத தகவல்களாகவும் இருந்தன.

லிங்கா படத்தின் முதல் 3 நாள் வசூல் 100 கோடியை தொட்டுவிட்டதாகவும் மற்றொரு தகவலும் படத்துறையில் பரவியது.
100 கோடி வசூல் படம் கொடுக்கும் தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யை இந்த செய்தி, அதிர்ச்சியடைய வைத்ததோ இல்லையோ, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது உண்மை.
அதிருக்கட்டும்.. 3 நாட்களில் லிங்கா படம் 100 கோடியை வசூல் செய்தது உண்மையா?

நமது, முதல்கட்ட விசாரணையில் 100 கோடி வசூல் உண்மைதான் என்று கற்பூரம் ஏற்றாத குறையாய் சத்தியம் செய்தனர்.
அவர்களின் சத்தியத்தில் நம்பிக்கை இல்லாமல் லிங்கா படத்தின் வியாபாரத்தில் இணைந்திருந்த சிலரின் வாயைக் கிளறினோம்…

லிங்கா படம் தமிழ்நாட்டில் மட்டும் 720 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.

படம் வெளியான 12.12.2014 வெள்ளிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும், வசூலான தொகை மட்டுமே 53 கோடி ரூபாய்!

இரண்டாவது நாள் 27 கோடி ரூபாயும், மூன்றாவது நாள் 24 கோடியும் வசூலித்திருக்கிறது.

ஆக லிங்கா படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல்… 104 கோடி!

இதற்கு முன் 100 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்ட எந்திரன், கத்தி போன்ற படங்கள் அந்த தொகையை வசூலிக்க பல நாட்கள் ஆனநிலையில், லிங்கா 3 நாட்களில் 100 கோடியை எட்டியது எப்படி?

தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட லிங்கா, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து ஏரியா தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி முதலே திரையிடப்பட்டிருக்கிறது. சில தியேட்டர்களில் அதிகாலை 4 மணி காட்சி முதல்….

அதுமட்டுமல்ல, பல தியேட்டர்களில் 200, 300, 500, 600 என்றும், அதிகபட்சமாக 1000 ரூபாய்வரை கட்டணம் வசூல் செய்திருக்கின்றனர்.

சென்னையில் 4 காட்சிகளும், மற்ற ஊர்களில் 8 காட்சிகள் வரை திரையிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே 3 நாட்களில் 100 கோடி வசூல் சாத்தியமானதாக சொல்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
டிக்கெட் கட்டணத்தை இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்கப்பட்டதற்கு, தியேட்டர்காரர்களின் பேராசை மட்டுமல்ல, பெரும் விலைகொடுத்து லிங்காவை அவர்கள் வாங்கியதும்தான் காரணம்.

போட்ட பணத்தை எப்படியாவது எடுத்தே ஆக வேண்டும் என்ற பதட்டத்திலும் பயத்திலும் இஷ்டத்துக்கு வசூல் வேட்டை நடத்தி உள்ளனர்.

லிங்கா படத்தை ஜெயா டிவி வாங்கியதால் அரசாங்கம் கண்டு கொள்ளாது என்ற தைரியம் மற்றொரு காரணம்..

இதுவரை வெளியான படங்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் லிங்காதான்.

லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து 140 கோடிக்கு வாங்கியது ஈராஸ் நிறுவனம்.
லிங்கா படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு 55 கோடிக்கு விற்றது ஈராஸ்.

கோவை ஏரியாவை மட்டும் லலிதா ஜூவல்லரிக்கு 13 கோடிக்கு முன்கூட்டியே விற்றுவிட்டனர். எனவே, கோவை ஏரியா நீங்கலாக தமிழக உரிமை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

55 கோடிக்கு படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ், அதை ஏரியா வாரியாக பிரித்து சுமார் 72 கோடி விற்றுள்ளது.

72 கோடிக்கு லிங்காவை வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி. அடிப்படையில் 90 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

தமிழ்சினிமா விற்பனையில் 90 கோடி என்பது மிகப்பெரிய சாதனைத் தொகை.

செங்கல்பட்டு ஏரியா மட்டும் 13.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் உள்ள ஒரு தியேட்டர் 37 லட்சம் (எம்.ஜி.) கொடுத்தும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் 25 லட்சம் (எம்.ஜி.) கொடுத்தும், விருகம்பாக்கத்தில் உள்ள தேவிகருமாரி தியேட்டர் 30 லட்சம் (எம்.ஜி.) கொடுத்தும் லிங்காவை திரையிட்டுள்ளனர்.

எனவே போட்ட பணத்தை உடனடியாய் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்துக்கு நிர்ணயித்து வசூலை அள்ளி இருக்கின்றனர்.

3 நாட்களில் 104 கோடியை லிங்கா படம் வசூல் செய்தாலும், 75 சதவிகித தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக கட்டணத்துக்கு விற்கப்பட்டதால், அரசாங்கத்துக்கு கணக்குக்காட்டப்பட உள்ள தொகை நான்கில் ஒரு பங்கு தொகை அதாவது 25 கோடி மட்டுமே!

Post a Comment

 
Top