0
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. அன்றைய தினம் வெளிவந்த இன்னொரு படம் அப்பா வேணாம்ப்பா. ஆர்.வெங்கட்ரமணன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி நடித்திருந்தார். அவரது மனைவியாக சீதா நடித்திருந்தார்.

24 மணிநேரமும் குடித்து சீரழிந்த ஒருவன் குடும்பம் என்னவாகிறது. குடிப்பதற்கு அவன் எத்தகைய தவறுகளை செய்கிறான். ஒரு கட்டத்தில் குடியை மறந்து விட்டு வரும்போது அவனை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்கிற கதையம்சத்தோடு வெளிவந்த படம். சில டெக்னிக்கலான கோளாறுகள், திரைக்கதை அமைப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும் இன்றைக்கு நாட்டுக்கு தேவையான நல்ல கருத்துடன், ஒரு கணம் எல்லோரையும் சிந்திக்க வைக்கிற அளவிற்கு படமாக்கப்பட்டிருந்தது.

படத்தை பார்த்த மீடியாக்கள் பாராட்டியது. ஆனால் தயாரித்து நடித்த வெங்கட்ரமணின் நிலைதான் பரிதாபத்துக்குரியதாகி விட்டது. சொந்த நிலத்தை விற்று 10 லட்சம் ரூபாய் செலவில் இந்தப் படத்தை எடுத்திருந்தார். படத்தை திரையிட தியேட்டர் தியேட்டராக அலைந்ததில் "தெருவில் திரைகட்டி போடு" என்று சொல்லி விரட்டி அடித்திருக்கிறார்கள்.

லிங்கா படம் வெளிவரும் தேதியில் வெளியிட்டால் அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் நம் படத்துக்கு வரமாட்டார்களா? என்ற ஆசையில் அன்று வெளியிட அவர் முயற்சித்தார். கடைசியில் அவருக்கு கிடைத்து இரண்டே இரண்டு தியேட்டர்கள். லிங்கா ஆரவாரத்துக்குள் இந்த படத்தின் சத்தம் வெளிவராமல் போய்விட்டது
பல ஆண்டுகளுக்கு முன்பு நான் குடித்துக் கொண்டே இருப்பேன் என்ற படம் இதே கருத்துடன் வெளிவந்தது. அந்த படத்துக்கு அரசு வரிவிலக்கு அளித்ததுடன், அதை அப்படியே மதுவிலக்கு பிரச்சார படமாக அரசே வாங்கிக் கொண்டது. தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபான கடை இருக்கும் ஒரு நாட்டில், அதை அரசே நடத்தும் ஒரு மாநிலத்தில் இதுபோன்ற படங்கள் முடங்கிப்போவது ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்.

Post a Comment

 
Top