0
ரஜினிகாந்த், ரவிக்குமார், ரஹ்மான், ரத்னவேலு, ராக்லைன் வெங்கடேஷ் கூட்டணியில், எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் தடை பல கடந்து வௌிவந்திருக்கிறது லிங்கா திரைப்படம்! அரசியலில் அடியெடுத்து வைப்பதில் தான் ரஜினிக்கு குழப்பம்... என்று பார்த்தால் சமீபகாலமாக சினிமாவிலும் அவருக்கு குழப்பங்கள் கூடியிருக்கிறது... என்பதற்கு சான்றாக வௌிவந்திருக்கிறது லிங்கா என்றால் அது மிகையல்ல...

கதைப்படி, சந்தானம், கருணா அண்ட் கோவினருடன் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு போலீஸ் லாக்-அப்பில் அடைப்பட்டிருக்கும் லிங்கா ரஜினி, லாக்-அப்பில் இருந்தபடியே பிரேசில், பிரான்ஸ், லண்டன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அயல்நாடுகளில் எல்லாம் ட்ரீம் எபெக்டில் ஓ நண்பா ஓ நண்பா... பாடலை பாடி ஆடி முடிக்கிறார். ரஜினியை லாக்-அப்பில் இருந்து விடுவித்து தங்களது சோலையூர் கிராமத்தில் 70 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அணைக்கட்டு லிங்கேஸ்வரர் கோயிலை திறந்து வைத்து ஊரை காப்பாற்ற அழைக்கிறார் அனுஷ்கா!

அதற்கு காரணம் ரஜினியின் தாத்தாவும் ராஜாவுமான லிங்கேஸ்வரன் ரஜினிதான்! அந்த ஊர் வளம் கொழிக்க வேண்டி தன் சொத்து, பத்து, அரண்மனை, சாம்ராஜ்ஜியம்... எல்லாவற்றையும் துறந்து அந்த பிரமாண்ட அணைக்கட்டையும், அதற்கு பாதுகாப்பாக லிங்கேஸ்வரர் கோயிலையும் நிர்மாணித்து கொடுத்துவிட்டு, கூடவே இருந்து காட்டிக்கொடுக்கும் நம்மூர் எட்டப்பர்கள் மற்றும் வௌ்ளைக்காரர்களின் கூட்டு சதியால் ஊரைவிட்டு போகிறார் ராஜா லிங்கேஸ்வர ரஜினி! அப்பொழுது அவர் வௌ்ளையர்களிடம் விலைபோய்விட்டதாக தவறாக புரிந்து கொள்ளும் ஊரும், உறவும் அவர் கட்டிய கோயிலை இழுத்து மூடுகிறது. பலவருடங்களுக்கு அப்புறம், அந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டால் தான் அணைக்கட்டு உடைந்து ஊர் அழியாமல் காப்பாற்றப்படும் எனும் நிலை, ஆனால் அந்த கோவிலை திறக்க ராஜா லிங்கேஸ்வரனின் வாரிசுதான் வரவேண்டுமென பிடிவாதமாக இருக்கிறார் அந்த ஊர் பெரிய மனிதர் கே.விஸ்வநாத்! அதனால் தான் அவரது பேத்தி அனுஷ்கா, ராஜா லிங்கேஸ்வரின் பேரன் லிங்கா ரஜினியை சோலையூருக்கு அழைக்கிறார். அதற்கு முதலில் மறுக்கும் பேரன் ரஜினி, அனுஷ்கா ஏற்படுத்திய இக்கட்டான சூழால் போலீஸின் பார்வையிலிருந்து தப்பிக்க அந்த ஊருக்கு கிளம்புகிறார். அந்த ஊர் கோயிலில் மரகதலிங்கம் இருக்கிறது.... என்று தெரிந்ததும் டபுள் ஓ.கே. சொல்லி, அதை களவாடி காசுபார்க்கும் ஆசையில் சோலையூரிலேயே தன் திருட்டு கூட்டாளிகள் சந்தானம், கருணாகரன் உடன் டேரா போடுகிறார். லிங்கா ரஜினி மரகதலிங்கத்தை கடத்தினாரா.? காப்பாற்றினாரா.? என்பது எக்கச்சக்க திருப்பங்களும் நிரம்பிய மீதிக்கதை. இந்த கதையுடன் ராஜா ரஜினியின் பெருமைமிகு ப்ளாஷ்பேக்களையும் கலந்து கட்டி கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்ட முயன்றிருக்கின்றனர் இயக்குநர் ரவிக்குமார் மற்றும் குழுவினர்.

ரஜினி, ராஜா லிங்கேஸ்வரனாகவும், லிங்கா ரஜினியாகவும் நம்பமுடியாத அளவிற்கு பிய்த்து பெடலெடுத்திருக்கிறார். ராஜா ரஜினியே வௌ்ளைக்காரன் ஆட்சியில் கலெக்டராகவும், பின் சமையல்காரரராகவும் உருமாறும் காட்சிகளும், உறுமும் காட்சிகளும் சுவாரஸ்யம்! அதற்காக வேகமாக ஓடும் அந்த காலத்து புகைவண்டியில் நைட் எபெக்ட்டில் ரஜினி பாய்ந்து பாயந்து கொள்ளையர்களை அடிப்பது, க்ளைமாக்ஸில் பறக்கும் பலூனை பைக்கில் துரத்தி, பாய்ந்து, விழுந்து, அதை பிடித்து... அதில் வில்லன் ஜெகபதிபாபு கையில் சிக்கியிருக்கும் அனுஷ்காவை விடுவித்து, அதில் இருக்கும் டைம்பாமை டேமை உடைக்காமல் வெடிக்க செய்வது உள்ளிட்ட... சாகசங்கள் கோச்சடையான் மாதிரி காமிக்ஸாக கூட தெரியாமல் சுத்த ஹம்பக்காக தெரிவது லிங்காவின் பெரும் பலவீனம்!

சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்காவுடன் தாத்தா ரஜினியும், பேரன் ரஜினியும் டூயட் பாடுவதெல்லாம் கூட பொருத்து கொள்ள முடிகிறது. மேற்படி. இரயில் மற்றும் பலூன் சண்டை, படத்தில் வருவது மாதிரியே பராக்கா சொல்லி ஓட வைக்கிறது என்றால் பாருங்களேன்!

வழக்கம் போலவே ரஜினியின் பன்ச் வசனங்களுக்கும் படத்தில் பஞ்சமில்லை. நான் ஒரு காரியத்தில் இறங்க மாட்டேன்... இறங்கினா முடிக்காமல் விடமாட்டேன்..., ஒருவேளை சாப்பிட உணவு இல்லேன்னா பிரச்னையில்லே... ஒருவேளைக்கும் சாப்பிட உணவில்லைன்னா தான் பிரச்னை!, எவ்வளவு உயரத்திலே வாழ்ந்தாலும் படுக்குறதுக்கு தேவையான இடம் நம்ம உயரம் அளவுக்கு தான் என பேசும் பன்ச் டயலாக்குகளும், வௌ்ளைக்கார கலெக்டரிடம் நீங்க கிழக்கு இந்தியன் கம்பெனி ஆரம்பிக்கேறன் என்று வந்துவிட்டு இந்தநாட்டை அடிமையாக்கியதை விட நான் பிறந்தநாள் விருந்துன்னு சொல்லி வைஸ்ராயை வரவழைத்து அவர்கிட்ட அணைக்கட்டு கட்ட பர்மிஷன் வாங்கியது பெரிய தப்பொன்றுமில்லை... எனப் பேசும் வசனமும், ஜாதி பிரச்னையில் அணைகட்டுவது பாதியில் நின்றபோது, எனக்கு அந்த ஜாதி மனிதன் இந்த ஜாதி மனிதன் யாரும் வேண்டாம்... நாமெல்லாம் இந்தியன்னு யாரெல்லாம் நினைக்கிறீர்களோ அவர்கள் வந்தால் போதும்... எனும் வசனவரிகளும் வீரியமிக்கவை. அதையெல்லாம் ரஜினி தன் பாணியிலே பேசும்போது தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது.

ஆனாலும் ஒருகாட்சியில் தன்னை புகழ்ந்து பாடும் புலவரை ரஜினி பொன் பொருள் தருவதாக சொல்லி ஏமாற்றுவது, அதுவும் நீங்க என்னை பாடி சந்தோஷப்படுத்தினீர்கள்... நான் பதிலுக்கு உங்களை சந்தோஷப்படுத்த அதையெல்லாம் தருவதாக சொல்லி மகிழ்வித்தேன்... எனும் ரீதியில் ஏமாற்றி பேசும் வசனம், ரஜினி தன் ரசிகர்களிடம்., நீங்க காசு கொடுத்து படம் பார்க்க வந்தீங்க..., நான் உங்களை அதற்கு ஈடாக எண்டர்டெயின் செய்தேன்... அதற்குமேல் என்னிடம் எதுவும் எதிர்பார்க்கூடாது... என்பது போல் இருக்கிறது. அதேமாதிரி ரஜினியை ஆரம்பகாட்சியில் தொட வரும் அனுஷ்காவிடம், அவர் ஹை-வோல்டேஜ் அதுமேல கைவச்சா பொசுங்கிடுவே... என சந்தானம் எச்சரிக்கும் காட்சிகள் யாருக்கு வைத்த பொடி பேச்சு? என்பதும் புரிகிறது.

அனுஷ்கா வழக்கம்போலவே அசத்தியிருக்கிறார். அதிலும் லலிதா ஜூவல்லரி வைர நெக்லஸை கொள்ளை அடிக்க நினைக்கும் ரஜினியுடன் ஒரே அறையில் அடைபட்டு கிடக்கும் அனுஷ்காவின் அந்த பத்து நிமிட கவர்ச்சி ரொமான்ஸ் காட்சி படம் மொத்தத்தையும் தூக்கி பிடிக்கிறது. பேஷ், பேஷ்!

சோனாக்ஷி சின்ஹா, ரஜினிக்கு பேத்திபோல் இருக்கிறார். ஆமாம், புட்டு சுடுவதில் கில்லாடியான சோனாக்ஷி, தன் கிளாமரை இன்னும் கொஞ்சம் புட்டுபுட்டு வைக்க யார்? தடை போட்டது...?!

சந்தானம், கருணாகரன் இருவரும் கொஞ்சநேரமே வந்தாலும் காமெடியில் நெஞ்சில் நிற்கின்றனர்.

கே.விஸ்வநாத், ஜெகபதிபாபு, ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், இளவரசு, ஜெயபிரகாஷ், பிரம்மானந்தம், மதன்பாபு, சிஸர் மனோகர், கிரேன் மனோகர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் நடிப்பை வழங்கியுள்ளனர்.

வௌ்ளையர் ஆட்சிகாலத்தில் ராஜாவே கலெக்ட்ராகவும், அந்த கலெக்டரே லண்டன் கேம்பிரிட்ஜில் படித்து திரும்பிய இன்ஜினியராகவும் இருப்பதை ரஜினி படத்தில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்!

ரத்னவேலுவின் ஔிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எல்லாம் பெரிதாக இருக்கிறது. படத்தில் நிறைய யானைகளும் இருக்கிறது... யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள், ரஜினி எனும் யானைக்கும் லிங்கா சறுக்கியிருக்கிறது!

ரவிக்குமாரின் இயக்கத்தில், டூயல் ரஜினியின் லிங்கா - ங்கா... சொல்லும் குழந்தை ரசிகர்களுக்கு பிடிக்கும்! ரஜினி ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து ரசிகர்களும் படம் பார்க்கும் போது தூங்கா திருந்தால் சரி!

மொத்தத்தில், லிங்காவில், சூப்பர் ஸ்டார் ரஜினி., கிங்கா.? ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!!!

Post a Comment

 
Top