0
போன மாதம் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 60 - வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அது சமயம் நண்பர் ஒருவர் தன்னுடைய முகநூல் பதிவில், தனக்கு பிடித்த கமல் படங்கள் என்று சில படங்களைப் பட்டியலிட்டிருந்தார். அதில் 'மகாநதி', 'குணா' போன்ற படங்கள் இடம் பெற்றிருந்தாலும்  'அவள் அப்படித்தான்', 'இளமை ஊஞ்சலாடுகிறது' போன்ற படங்களும் இடம் பெற்றிருந்தன. பார்க்கப் போனால் ஆரம்ப காலத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த பல படங்களில் கமலின் நடிப்பு அறிவுஜீவித்தனமாக இருந்தாலும் (அது அவரின் கதாபாத்திரமாக இருப்பினும்)  ரஜினியின் நடிப்பு  மிக இயல்பாக இருக்கும்.


உதாரணத்துக்கு பல படங்கள். 'அவள் அப்படித்தான்' படத்தில் கமல் ஹீரோ. ரஜினி ஹீரோ இல்லை. ஆனால் கைதட்டல் என்னவோ ரஜினியின் வெரி கேஷுவல் ஆக்டிங் மற்றும் டயலாக் மாடுலேஷனுக்குத்தான். 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் ரஜினிக்கு பாடலே இல்லை.( பெரும்பாலான கமல், ரஜினி இணைந்த படங்களில் ரஜினிக்கு பாடல் இருக்காது) ஆனாலும் மிக கண்ணியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். '

'அவர்கள்' படத்தில் கமல் ஹீரோ. ஆனால் ஹீரோயின் சுஜாதாவின் கணவராக வரும் ரஜினியின்  சாடிஸ்ட் நடிப்பு  பிரமாதமாக இருக்கும். கிட்டத்தட்ட அந்த கேரக்டரின் மீது நமக்கு கடுமையான வெறுப்பு வரும்படி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். 'மூன்று முடிச்சு' படத்திலோ வேறு களம். கிட்டத்தட்ட வில்லன். தான் அடைய நினைத்த  ஸ்ரீதேவி, தன் அப்பாவின் மனைவியாக அதாவது ரஜினியின் சித்தியாக வந்து அவரை மகனே என்று அழைக்கும்போதெல்லாம் ரஜினி அடையும் எரிச்சல், நிச்சயம் கைதட்டலுக்கு உரிய ரசிக்கக்கூடிய நடிப்பு.

'ஆறிலிருந்து அறுபதுவரை', ' ஸ்ரீராகவேந்திரா', 'எங்கேயோ கேட்ட குரல்' போன்ற படங்களில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான ரஜினியின் நடிப்பு 'முரட்டுக்காளை' படத்துக்குப் பின் மாறியது. கமர்ஷியல் ஹீரோவாய் மாறி ரசிகர்களின் முரட்டுத்தனமான அன்புக்கு கட்டுப்பட்ட ரஜினி, அதன் பின் தன் நடிப்பு குறித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னத்தின் 'தளபதி' படத்தில் நடித்தார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பு ரஜினியின் பேட்டி ஓர் வார இதழில் வெளியானது. அப்போது ரஜினியை நோக்கி  கேட்கப்பட்ட கேள்வி, '' மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து உங்களுக்கு பயமில்லையா ?''  அப்போது ரஜினி நடித்துக்கொண்டிருந்த மசாலா படங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வைத்திருக்கலாம். அதற்கு ரஜினி சொன்ன பதிலில் இருக்கிறது சுவாரஸ்யம். '' 2 1/2 வயசு குழந்தையையே நடிக்க வெச்சவர் அவர். என்னை நடிக்க வைக்க மாட்டாரா?'' தளபதிக்கு முன் வெளியான மணிரத்னத்தின் படம் 'அஞ்சலி'.

இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிக்கு அதிக க்ளோசப் ஷாட்டுகள் இருந்தது 'தளபதியி'ல்தான். அவரும் பிரமாதமாக நடித்திருந்தார். ரஜினி நடித்த கடைசிப்படம் அதுவாகத்தானிருக்கும்.  அப்புறம் வந்தவை எல்லாம் ரஜினியின் பிம்பங்களுக்கு பாலபிஷேகம் செய்யும் படங்கள்.

'முள்ளும் மலரும்' படத்தில் பாசமிகு அண்ணனாய் வந்து 'இஞ்ஜினீயர் சார்' என்ற காளியின் குரலை மறக்கமுடியாது.

திருடனாகவும், பார்பராகவும் இரு வேடங்களில் இப்போது பார்க்கும்போதும் புதிதாய் ரசிக்கத்தோன்றும் 'ஜானி' ரஜினியை நாம் இழந்துவிட்டோம்தான்.

அது சரி... பரட்டை இல்லாவிட்டால் சப்பாணி ஏது?

Post a Comment

 
Top