0
எந்தவொரு மாற்றத்தையும் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

சேரன் செய்திருப்பது இதைத்தான்.

தமிழ் சினிமாவில் ‘பாரதிகண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராஃப்’ உட்பட பல தரமான வெற்றிப் படைப்புகளை தந்த இயக்குநர் சேரன், கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனால், கடைசியாய் அவர் இயக்கிய ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

எனவே படத்தை தியேட்டரில் வெளியிடும் அதே தினத்தில் ஒரிஜினல் டிவிடிக்களை வெளியிடும் முடிவுக்கு வந்தார் இயக்குநர் சேரன்.

அதற்காக, புது முயற்சியாக சி2ஹெச், அதாவது சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை அறிவித்தார்.

இதன் மூலம் புதிய திரைப்படங்களை படம் வெளியான அன்றே நேரடியாக டி.வி.டி. மூலம் விற்பனை செய்தால் அதை வாங்கும் மக்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே புதுப்படங்களை கண்டு களிக்க முடியும்.

இதற்காக ஒரு நிறுவனத்தையும் தொடங்கிய சேரன் சினிமா டு ஹோம் துவக்கவிழாவை சில மாதங்களுக்கு முன் நடத்தினார்.

அதன் பிறகு கடந்த சில மாதங்களாக இதன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த சேரன் இத்திட்டத்தின் மூலம் தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வருகிற ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இப்படத்தின் 50 லட்சம் டி.வி.டி.க்கள் விற்பனையாகும் என்றும், அதன் மூலம் சுமார் 50 லட்சம் குடும்பங்கள் இத்திரைப்படத்தை கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார் இயக்குநர் சேரன்.

ஆக, சேரன் இயக்கி, தயாரித்துள்ள ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தை பொங்கல் திருநாளில் வீட்டிலிருந்தபடி பார்த்து மகிழும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

”படத்தின் தயாரிப்பாளர்களே ஒரிஜினல் டி.வி.டி.களை வெளியிடுவதால் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியாக வாய்ப்பில்லாமல் போகும்போது தயாரிப்பாளருக்கு போட்ட பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.” என்ற படத்துறையில் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

வேறு சிலரோ, இந்த திட்டம் வேலைக்கு ஆகாது பாஸ் என்கிறார்கள்.

Post a Comment

 
Top