புத்தகயா மஹாபோதி ஆலயம் |
புத்தகயா மஹாபோதி ஆலயம்
ஆசையே அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் பெற்ற மரம் அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆலயம் மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமர்ந்தவாக்கில் அமைதியின் உருவமாக ஆழ்ந்த தியான நிலையில் புத்தர் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
மஹாபோதி ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும் அதைச் சுற்றியுள்ள நான்கு சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்தும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. கோபுரம் கட்டப்பட்ட காலம் 3-6ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என கருதப்படுகிறது. சிறப்புக்குரிய மஹாபோதி ஆலயத்தைக் கட்டியவர் அசோக மன்னர். புத்தர் ஞானம் பெற்று சுமார் 250ஆண்டுகளுக்கு பிறகு இதை கட்டியிருக்கிறார். புத்தர் தியானத்தில் அமர்ந்த இடத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இரண்டு பெரிய பாதச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ளன.
புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் சிறப்புகுரியதாகிறது.
உலகம் முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள். புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல் அறிவிக்கப்பட்டது.
எப்படிச் செல்லலாம்?
சிறப்புக்குரிய புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம் உள்ளது.
|
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment