0
 திருட்டு சி.டி. மூலம் லிங்கா திரைப்படத்தை வேனில் ஒளிபரப்பிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் டிச.12-ம் தேதி வெளியானது. அதற்கடுத்த ஓரிரு நாளிலேயே, அந்த படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியாகி விட்டன. இதைத் தடுக்க, போலீஸாருடன் இணைந்து ரஜினி ரசிகர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுரை அரசு மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வேனில் டி.வி.யில் லிங்கா படம் ஒளிபரப்பானது. வேனில் இருந்தவர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக மற்றொரு வாகனத்தில் வந்த திரைப்பட விநியோகஸ்தர் ஆர்.எம்.கந்தன் என்பவர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.


அதன்பேரில், தல்லாகுளம் ஆய்வாளர் இளவரசு மற்றும் போலீஸார் அந்த வேனை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது லிங்கா படம் ஓடிக் கொண்டிருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து வேன் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மதனகோபாலைக் கைது செய்தனர். லிங்கா சி.டி. மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

Post a Comment

 
Top